கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியில் 2 பேர் சந்தித்து கொண்டால் வெயிலின் தாக்கம் குறித்து தான் பேசுகிறார்கள். வெளியூர் மக்கள் 2 பேர் சந்தித்தால், உங்க ஊர் பரவாயில்ல. இங்க பாருங்க, கடுமையான வெயில் என்று வெயிலின் தாக்கம் குறித்தே பேசுகிறார்கள்.
காலை 11 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாகவே உச்சந்தலையை பிளக்கும் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில் வெளியில் செல்வதையே குறைத்துக்கொண்டனர். இதனால் பகலில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் தஞ்சை மாநகரில் சாலையோரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த இளநீர், தர்ப்பூசணி, கரும்பு ஜூஸ் கடைகளில் விற்பனை களை கட்டியது.
பகலில் தான் வெயில் என்றால் அதன் தாக்கம் இரவிலும் விட்டபாடில்லை. இரவிலும் வியர்த்து கொட்டும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. இதனால் தூக்கமின்றி திண்டாடி வந்த மக்களை குளிர்விக்க இன்று தமிழ் நாட்டில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்தது.
தஞ்சை நகரிலும் சுமாரான மழை பெய்தது. திடீரென இன்று மதியம் மேகம் கருக்க, இடி மத்தளம் வாசிக்க படபடவென்று ஆரம்பத்தில் வேகம் காட்டி பெய்ய ஆரம்பித்த மழை பின்னர் மிதமான மழையாக தன் வேகத்தை குறைத்துக்கொண்டது. தஞ்சை மாநகராட்சி எல்லையை தாண்டி சுற்று வட்டாரங்களிலும் இந்த மழை பெய்தது.
இந்த மழையால் சட்டென்று வெப்பம் தணிந்தது . கானல் நீர் தெரிந்த சாலைகளில் உண்மையிலேயே மழை நீர் ஓடியது. மதியம் 12 முதல் 3 மணிவரை வெளியில் நடமாடாத மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தபடி மழை பெய்வதை வேடிக்கை பார்த்தனர். சுமார் அரைமணிநேரம் பெய்தது என்றாலும் இந்த மழை தஞ்சையை குளிர்வித்தது உண்மை தான், கிளைமேட்டையே மாற்றி போட்ட இந்த மழையால் மக்கள் ஹேப்பி தான் போங்க. தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் வானிலையே மாறி இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. பலமான காற்று வீசியதால் குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.