தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அருகில் திருச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த டேங்கர் லாரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் பத்தாயிரம் லிட்டர் டீசல் மற்றும் 4000 லிட்டர் பெட்ரோல் திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக அரியலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகம் அருகில் வந்த பொழுது லாரியில் கசிவு ஏற்படுவதாக டிரைவரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
உடனே டேங்கர் லாரியை சாலையோரம் நிறுத்திய டிரைவர் ராஜா லாரியில் கசிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்தார். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
டேங்கர் நிற்பதை கண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபரம் கேட்டறிந்தனர். உடன் டேங்கர் லாரியை சுற்றி தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் லாரி அருகில் செல்லாத வகையில் பாதுகாப்பை ஏற்படுத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பிற்காக தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் அங்கிருந்து தொழில்நுட்ப பொறியாளர்களை அனுப்பி இருப்பதாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருகைக்காக டேங்கர் லாரி காத்திருந்தது. பின்னர் தொழில்நுட்ப பொறியாளர்கள் வந்து கசிவை சரி செய்த பின்னர் டேங்கர் லாரி புறப்பட்டு சென்றது.
