கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் 2 தினங்களுக்க முன் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு என்றால் பலர் வெற்றி அடைவதும், சிலர் தோல்வி அடைவதும், தோல்வி அடைந்தவர்களின் பெற்றோர் 2 தினங்களுக்கு பிள்ளைகளை திட்டுவதும், சிலர் உச்சபட்சமாக இரண்டு சாத்து சாத்துவதும் வழக்கமான ஒன்று தான்.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் இதற்கு நேர் மாறாக நடந்து ள்ளது. பாகல்கோட் மாவட்டம், சோளசகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் எல்லப்பா. இவர், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 625க்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, ஆறு பாடங்களிலும் தோல்வி அடைந்தார். இந்த மோசமான தோல்வியால் அபிசேக் கவலையடைந்தார். அனால் அவனது பெற்றோர் கவலைப்படவில்லை.
மாறாக மகனுக்கும் தைரியமூட்டினர். ரிசல்ட் வந்ததும் மகன் மோசனமான தோல்வி என்பதை தெரிந்தும் 2 கிலோ கேக் ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தனர். அந்த கேக்கில் மகனின் பெயர், அவன் எடுத்த மார்க், எத்தனை சதவீதம் என்பதை எல்லாம் எழுதி வாங்கி வந்து அக்கம், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்தனர்.
மகனையும் நடுவில் நிற்கவைத்து கேக்கை வெட்டி மகனுக்கு ஊட்டினர். அபிஷேக் கன்னத்தில் முத்தம் கொடுத்த தந்தை எல்லப்பா , மகனின் தோளில் கைபோட்டு, ‘தேர்வுகள் தான் நம் வாழ்க்கை அல்ல. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்’ என்று உற்சாகப்படுத்தினார்.இதில் அபிசேக்கின் தாயார், தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.மேலும் தந்தை எல்லப்பா கூறுகையில், ”என் மகன், 18 மாத குழந்தையாக இருந்தபோது, அவனின் இரு கால்களும் தீயில் பாதிக்கப்பட்டன. அன்று முதல் இவருக்கு நினைவாற்றில் சற்று குறைவாகவே இருந்துள்ளது. இதனால் ஞாபக மறதியால், தேர்வில் சரியாக எழுத முடியவில்லை, ஆனால் அடுத்த முறை சாதிப்பான்” என்றார்.
ஒவ்வொரு பெற்றோரும் அபிசேக்கின் பெற்றோர் போல் இருந்தால், நீட் தற்கொலையே வராது. முன்மாதிரியான இந்த பெற்றோருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தேர்வு வெற்றி என்பது மட்டுமே வாழக்கை இல்லை. அதையும் தாண்டி சாதனைகள் எத்தனையோ இருக்கிறது என்று அவருக்கு பாராட்டு மழை பொழிகிறார்கள் சமூகவலைதளவாசிகள். தமிழ்நாட்டுல இன்னும் 10 நாளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வர இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும், மாணவர்களும் இந்த செய்தியை படித்து நடந்து கொண்டால் நல்லது.