மயிலாடுதுறையில் முதலமைச்சர் பிறந்தநாள் மற்றும் சட்டப் போராட்டத்தில் வென்ற முதல்வருக்கு பாராட்டு, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் என திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கழக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசிக் கொண்டிருந்தபோது கடுமையான காற்று வீசத் தொடங்கியது. இதனால் பொதுக்கூட்டத்தில் இருந்த பெண்கள் வெளியேறினர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சாய்ந்து ஆ ராசா பேசிக் கொண்டிருந்த மைக் மீது விழுந்தது. அப்போது இதனைக் கண்டு சுதாரித்து கொண்ட ஆ.ராசா உடனடியாக மைக்கை விட்டு விலகிச் சென்றதால் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதனால் மேடையில் இருந்த அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் ஸ்தம்பித்தனர்.
இதையடுத்து தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பேனர்கள் காற்றின் வேகத்தில் கிழிந்து பறந்தது. தொடர்ந்து நாற்காலிகள் காற்றில் உருண்டு ஓடியது. உடனடியாக பலத்த காற்றின் காரணமாக கூட்டம் முடிவடைந்து விட்டதாக அனைவரும் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தினர். ஆ. ராசா, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் விழா மேடையில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்த இடம் வெறிச்சோடியது. பலத்த மழை பெய்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பேசிக் கொண்டிருந்த போது மைக் மீது அலங்கார மின்விளக்குகள் விழுந்து சுதாரித்து தப்பிய நேரடி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
