ட்ரக்கிங் தமிழ்நாடு என்ற என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கேரளா – திருவனந்தபுரம் அட்டிங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் மருத்துவரான அஜ்சல் செயின் (26) மற்றும் அவரது நண்பர் ஃபாதில் (27) ஆகியோர் டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர் .காலை 8:00 மணிக்கு டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து இரண்டு மலைப்பாதை வழிகாட்டிகள் உடன் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காட்டின் நடுவே மலையேற்றத்திற்காக சென்றுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் மாலை திரும்பி வந்தபோது மருத்துவர் அஜ் சலின் உடல் சோர்ந்து காணப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. வேட்டைக்காரன் புதூரில் மருத்துவர் அஜ்சலை பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக பணியிலிருந்து மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, “இறந்த மருத்துவர் அஜ்சல் இதய நோய் கொண்டவர், இதயத்துடிப்பு சீராவதற்காக தினமும் மூன்று மாத்திரைகளை உட்கொண்டு வந்தார், தொடர் சிகிச்சையில் இருப்பவர் தனது நண்பருடன் மலையேற்றத்தின் பங்கேற்றது தான் மருத்துவரின் உயிரிழப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் மலை ஏற்றம் செல்பவர்கள் உரிய உடை, தேவையான தண்ணீர், மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முன் பயிற்சி இல்லாதவர்கள் மழையேற்றத்தை தவிர்க்க வேண்டும்” என்றார்.