திருச்சி விமான நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் விவசாயி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிந்தார்.
திருச்சி செம்பட்டு அருகில் உள்ள திருவளர்ச்சிப்பட்டி ,உடையார் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (48). விவசாயியான இவர் திங்கள்கிழமை இரவு கடைவீதிக்கு சென்று விட்டு, திருச்சி } புதுக்கோட்டை பிரதான சாலையை செம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே கடக்க முயன்றார். அப்போது மாத்தூர் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சொக்கலிங்கம் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சாலை நடுவே ரத்த வெள்ளத்தில் அவரது உடல் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இதுபற்றிய தகவலறிந்த திருச்சி விமானநிலைய போலீசார் நிகழ்விடம் சென்று, சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை சீராக்கினர். திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
