Skip to content

தஞ்சையில் 10ம் தேதி கூட்டரசு கோட்பாடு மாநாடு- மணியரசன் தகவல்

தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், மாநிலங்களுக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்கான வல்லுநர் குழுவை அமைத்துள்ளார்.

இந்திய அரசிலயமைப்பு சட்டம் இதுவரை சுமார் 106 முறை திருத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக அல்ல. மாநில அரசுகளிடம் இருந்த அதிகாரங்களை பறிப்பதற்காக திருத்தம் செய்யப்பட்டது. மாநில அரசிடம் இருந்து வந்த விற்பனைவரி உரிமையை நீக்கி, அதனை இந்திய அரசின் சரக்கு சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி) சேர்த்து விட்டனர். இதேபோல், மாநில அரசிடம் இருந்த கல்வி உரிமையை பறித்து பள்ளி கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை மத்திய அரசிடம் சேரத்துவிட்டனர்.

இதேபோல், அரசிலமைப்பு சட்டத்தில் இருந்து ஆளுநர் பதவிக்கான உறுப்புகள் 153 தொடங்கி அப்பதவி சார்ந்த பிரிவுகள் அனைத்தையும் நீக்கவேண்டும். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற கூட்டாட்சி நாடுகளில் உள்ள மாநில ஆட்சிகள் போல் இந்தியாவிலும் மாற்ற வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களை விவாதிக்கவும், தமிழர்களின் தொன்மை, வளமை, பண்பாடு போன்றவை குறித்த ஆய்வரங்கங்கள் நடத்தவும், “கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு” வரும் 10-ம் தேதி தஞ்சையில்  நடக்க உள்ளது. மாநாட்டில் கருத்தரங்கம், பாவரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது பழ.ராஜேந்திரன், தென்னவன், ராசு முனியாண்டி, ராமசாமி, தீந்தமிழன் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!