கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்நிலவூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வனப்பகுதியில் சென்று சோதனை செய்தபோது அங்கு மூன்று பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து கொண்டு இருந்தனர், அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மாது (35), மாணிக்கம் (60) மற்றும் ராமராஜ் (62) எனவும், இவர்கள் மூவரும் சேர்ந்து நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்ததும் தெரியவந்தது.
இங்கு தயாரிக்கக்கப்பட்ட துப்பாக்கியை ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து துப்பாக்கி தயாரித்த மாது, மாணிக்கம், ராமராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.