இந்தியாவுக்கே எடுத்துகாட்டாக சென்னையில் முதல்வர் பேரணி
1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தொடங்கப்பட்டது திமுக. இந்த கட்சி தொடங்கப்பட்டபோது அது தேர்தலில் போட்டியிட வேண்டும், ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற என்ற எண்ணத்தில் தொடங்கப்படவில்லை. மாறாக தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, யாரும், யாருக்கும் அடிமையில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட இயக்கம்.
பின்னர் தான் இந்த கட்சி தேர்தலில் களம் காண முடிவு செய்து வெற்றியும் கண்டது. திமுக தொடங்கி 76 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்றைக்கு இந்தியாவில், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தமான பெரிய கட்சி என்றால் அது திமுக தான்.
இது மாநில கட்சியாக பார்க்கப்பட்டபோதிலும், இந்திய இறையாண்மைக்காகவும், இந்தியாவின் நலனுக்காகவும் எப்போதும் தன் கடமையை தேச அளவில் சிறப்பாகவே ஆற்றி வந்திருக்கிறது திமுக. இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் மக்களுக்கு பாதிப்பு என்றாலும் உடனடி குரல் தமிழ்நாட்டில் இருந்து தான் வரும். அது திமுகவின் குரலாகத்தான் இருக்கும்.
இதையும் தாண்டி உலகின் எங்கோ ஒரு பகுதியில் தமிழர்களுக்கு இன்னல் என்றால் அப்போதும் திமுகவின் குரல் தான் ஓங்கி ஒலிக்கும். அதன் மூலம் தமிழர்களின் துன்பம் தீரும். கடந்த 76 ஆண்டுகால வரலாற்றில் திமுக தமிழ்நாட்டையும் தாண்டி தனது பங்கை சீறிய முறையில் செய்து வந்திருக்கிறது.
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள், தேசிய பாதுகாப்பு நிதிக்காக ரூ.6 கோடியை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரிடம் அளித்தார். இந்தியாவின் பல பெரிய மாநிலங்கள் கூட அந்த அளவு பெரிய தொகையை அளிக்காத நிலையில் திமுக அதனை வழங்கியதாக பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரே கலைஞரை பாராட்டினார்.
இது நாட்டு நலனில் திமுகவுக்கு எப்போதும் இருந்து வரும் அக்கறைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான். இப்படி எத்தனையோ சொல்லலாம். இந்தியாவின் எந்த பகுதியில் மக்களுக்கு இடர், துன்பங்கள் ஏற்பட்டாலும் அதனை மனிதாமானத்தோடு அணுகி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதில் திமுக எப்போதும் தனது கடமையை ஆற்றி வந்திருக்கிறது.
நாடு கடந்த நிலையிலும், மனிதாபிமானத்தோடு, ஈழத்தமிழர்களுக்கு திமுக பலமுறை உதவி உள்ளது. கொரோனா முடிந்த நிலையிலும் இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து கிடந்தபோது அங்குள்ள தமிழ் மக்கள் பட்டினியால் அவதிப்படுவதை அறிந்து அவர்களுக்கும் உதவ முன்வந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதற்காக மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று ரூபாய் 80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசியும், 28 கோடி பெறுமானமுள்ள 137 வகையான மருந்து பொருட்களையும் , 15 கோடி மதிப்புள்ள குழந்தைகளுக்கான பால்பவுடர் டின்களையும் அனுப்பி வைத்தார்.
இப்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய திருநாட்டின் அரங்கேற்றும் அட்டூழியத்தை அழித்தொழிக்க நம் இந்திய ராணுவம் எல்லையில் உயிரை துச்சமென மதித்து இந்தியாவின் இறையாண்மையை காக்க போர்க் களத்தில் நிற்கிறது. போர் என்று வந்து விட்டால் இருபக்கமும் சேதங்கள் வரத்தான் செய்யும். இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 3 தினங்களாக அவரவர் எல்லைக்குள் இருந்து தான் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
இன்னும் யாரும் எல்லை தாண்டி விடவில்லை. அதற்குள் இந்தியா தனது பணியை தீரமுடன் செய்து எதிரிகளை வீழ்த்தும் என்பதில் நமக்கு எந்த ஐயமுமில்லை. இந்திய வீரர்களின் இந்த வீரதீர கடமைகளை ஆதரித்து திமுக இன்று மாலை சென்னையில் பிரமாண்டமான பேரணியினை முதல்வர் ஸ்டாலின் நடத்துகிறார்.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திலிருந்து முதல்வர் தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும்.
இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.”
இந்திய ராணுவதுக்கு எப்போதும் திமுகவும், தமிழக அரசும் பக்கபலமாகவே இருந்து வருகிறது. இந்த பேரணி மூலம் நாட்டுப்பற்று, ராணுவத்தின் தியாகம் இளைஞர்களின் நெஞ்சங்களில் ஊற்றப்படும் என்பது மட்டும் உறுதி.இப்போது 8 கோடி தமிழர்களும் ராணுவத்துக்கு ஆதரவாக நிற்கிறோம் என்பதை காட்ட இந்த பேரணி நடத்தப்படுகிறது.
இந்தியாவின் எல்லை மாநிலங்களில் இப்படிப்பட்ட பேரணி நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று தான். ஆனால் ஏனைய மற்ற மாநிலங்கள் கூட இதை சிந்திக்காத நிலையில், ராணுவத்துக்கு ஆதரவாக இந்தியாவில் முதன்முறையாக பேரணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போதும் இந்திய நலனில், தேசப்பற்றில், இந்திய இறையாண்மையை காப்பதில் நம்பர் 1 முதல்வராக இருக்கிறார் என்பது மட்டும் தெளிவு.
இந்த பேரணிக்கு பல்வேறு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் இதில் பங்கேற்று……. இந்தியா வெல்லட்டும், ராணுவத்துக்கு துணைநிற்போம் என்ற முழக்கத்துடன் நமது தேசப்பற்றை வெளிப்படுத்துவோம். வெல்லட்டும் இந்தியா.