இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் கடந்த 7ம் தேதி அதிகாலை முதல் ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை)அதிகாலை 3.15 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தியா சங்கலித் தொடர் போல பாகிஸ்தானில் தாக்குதலை தொடுத்தது. இதனால் பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்ள் பெரும் சேதத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. எனவே அந்த விமான நிைலயங்கள் இயங்காது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4 மணி அளவில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, “இந்திய போர் விமானங்கள் மூலம் வானில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் கொண்டு இந்த தாக்குதல் நடைபெற்றது. இருப்பினும் இதனால் விமானப் படையின் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. ராவல்பிண்டியில் உள்ள நூர்கான், சக்குவால் பகுதியில் உள்ள முரித், ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃப்பிகி விமான தளங்களை இந்தியா தாக்கியது” என கூறியுள்ளார்.
நேற்று முன்தினம்(வியாழன்) இரவு இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவும் பாகிஸ்தானின் 400 ட்ரோன்களை வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை என்பது குறிப்பிடத்தக்கது.