அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று நடைபெற்ற தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் கோவில் ஜமீன்தார்களின் வம்சாவழி கோவிலாகவும் பல ஊர்களைச் சேர்ந்த பொது மக்களின் குலதெய்வ கோவிலாகவும் விளங்கி வருகிறது. கோவிலில் கடந்த 1942 ஆம் வருடத்திற்கு பிறகு தேரோட்டம்
நடைபெறவில்லை. இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்பு அரியலூர் ஜமீன்தாராக பட்டமேற்ற துரை விஜய
ஒப்பில்லாத
மழவராய நயினார், கோவில் குலதெய்வ மக்கள் மற்றும் பக்தர்களின் முயற்சியால் புதியதாக திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி 83 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் ஆண்டு திருத்தேர் பெருவிழா கடந்த 2ஆம் தேதி எல்லை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினந்தோறும் அண்ண வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒப்பில்லாத அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் ஒன்பதாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து பட்டாடைகள் சார்ந்த பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒப்பில்லாத அம்மன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேரில் எழுந்தருளினார். கோவில் ஆதின பரம்பரை தர்மகர்த்தாவும், அரியலூர் ஜமீன்தார் வம்சாவளியான கே.ஆர். துரை திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதன் பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு மாட வீதிகளில் அசைந்தாடி சென்ற திருத்தேரில் வீட்டிலிருந்த அம்மனுக்கு ஒவ்வொரு வீட்டிலும் பொதுமக்கள் பழம், பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருள்களை படைத்து வணங்கினர். தேர் திருவிழாவில் வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீதிகள் தோறும் மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது. அரியலூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அரியலூர் நகரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தினால் பொதுமக்களும் பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

