போர் நிறுத்தமும் அதற்கான காரணமும்- குட்டையை குழப்புகிறார் டிரம்ப்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் பகல்ஹாமில் 26 பேரை சுட்டுக்கொன்றதற்கு தக்க பாடம் புகட்டும் வகையில் கடந்த 7ம் தேதி அதிகாலை இந்தியா தனது அதிரடி தாக்குதலை நடத்தி தீவரவாதிகளின் முகாம்களை தரைமட்டமாக்கியது. அந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள், 40 ராணுவத்தினரும் பலியானார்கள்.
பஹல்காமில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டார்களே அதற்கு இது தீர்வா? என்றால் இல்லை. அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. 26 பேரை கொன்ற தீவிரவாதிகள் இன்னும் கிடைக்கவில்லை. அதற்குள் 10ம் தேதி மாலை 5 மணிக்கு இருநாடுகளும் போரை நிறுத்த ஒப்புக்கொண்டன.
இந்தியா எப்போதும் சமாதானத்தை விரும்பும் நாடு. அந்த வகையில் இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இந்த நிலையில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் முதல்கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. அதில் என்ன முடிவு எட்டப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். போர் சூழல் ஏற்பட்டு அது முடிவுக்கு வந்த நிலையில் நம் பிரதமா், நாட்டு மக்களுக்கு அறிவித்த செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முப்படைகளுக்கும் வீர வணக்கம் செலுத்தினார். இந்திய ராணுவம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது என்று பாராட்டினார். இந்த வெற்றியை இந்திய தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.
அத்துடன் ஆபரேசன் சிந்தூருக்கான காரண காரியங்களையும் கூறினார். நமது சகோதரிகள், மகள்களின் குங்குமத்தை அழிப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் தெள்ளத் தெளிவாக இப்போது உணர்த்தப்பட்டு உள்ளது.
நீண்டகாலமாக பாகிஸ்தானின் பாவல்பூரும் முர்டேவும் சர்வதேச தீவிரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக திகழ்ந்தன. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், லண்டன் சுரங்கப் பாதை ரயில்கள் மீதான தாக்குதல், பஹல்காம் தாக்குதல் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான சதித் திட்டங்கள் அனைத்தும் பாவல்பூர், முர்டேவில் உள்ள தீவிரவாத முகாம்களில் தீட்டப்பட்டன. அந்த இடங்களை இப்போது தகர்த்து விட்டோம் என்று பெருமிதத்துடன் கூறினார்.
மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ இந்திய ராணுவ டிஜிஎம்ஓ-ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இனிமேல் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தான் டிஜிஎம்ஓ உறுதி அளித்தார். இதன்பிறகே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ராணுவ நடவடிக்கையை நாங்கள் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைத்திருக்கிறோம் அல்லது ஒத்திவைத்திருக்கிறோம். பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிகளை துவம்சம் செய்தன. எங்களது அதிநவீன ஆயுதங்களை பார்த்து உலகம் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.
உலக நாடுகளுக்கு தெளிவாக ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். தீவிரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது.
தண்ணீரும் ரத்தமும் ஒரே நேரத்தில் பாயாது. வர்த்தகமும் தீவிரவாதமும் ஒருசேர பயணிக்க முடியாது. அணு ஆயுத பூச்சாண்டிக்கு அஞ்ச மாட்டோம். தீவிரவாத தாக்குதலுக்கு எங்களது பாணியில் தகுந்த பாடம் கற்பிப்போம். இது புத்தர் பிறந்த பூமி. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.
இறுதியாக இந்தியர்களின் வீரம், ஒற்றுமைக்கு மீண்டும் ஒருமுறை வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று நம்முடைய பிரதமர் ஆற்றிய உரை 140 கோடி மக்களுக்கும் புது தெம்பையும், நம்பிக்கையையும் ஊட்டியது.
ஆனால் பிரதமர் மோடியின் உரைக்கும், இந்த விவகாரத்தில் தலையிட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் தகவலும் முரண்பட்டதாக இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் டிரம்ப் ஆரம்பத்தில் இருந்தே மூக்கை நுழைத்துக்கொண்டு முந்திரிகொட்டை போல அறிக்கை விட்டு கொண்டிருப்பதை பார்த்தால் போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது , யாரால் ஏற்பட்டது என்பது இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது.
யார் மூலம் போர் நிறுத்தப்பட்டாலும், நமக்கு தேவை சமாதானம். அது வருவதற்கு முதல் வழி போர் நிறுத்தம் தான். ஆனால் பிரதமர் மோடி இது நிரந்தரமான போா் நிறுத்தம் இல்லை என்றும் எச்சரிக்கை செய்திருப்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘ இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. அவர்களிடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது. போரை நிறுத்தினால் இருநாடுகள் இடையே நடக்கும் அதிக வர்த்தகம் செய்ய உள்ளதாக நான் தெரிவித்ததே போர் நிறுத்தத்திற்கு ஒரு பெரிய காரணம்.
நான் சொன்னேன், ‘வாருங்கள், நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம்’. நீங்கள் போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்துவோம். நீங்கள் போரை நிறுத்தினால், நாங்கள் வர்த்தகம் செய்கிறோம். நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால், நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்றேன்.
திடீரென்று அவர்கள், நாங்கள் போரை நிறுத்தப் போகிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் அதைச் செய்தார்கள். பல காரணங்களுக்காகச் செய்தார்கள், ஆனால் வர்த்தகம் அதில் பெரிய ஒன்று. நாங்கள் பாகிஸ்தானுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். இந்தியாவுடனும் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம்.என்னைப் போல் யாரும் வர்த்தகத்தை பயன்படுத்தி யாரும் போரை நிறுத்தியதில்லை.
இருநாடுகளும் மோதினால் அது ஒரு மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். அதனால் போரை நிறுத்தியதைப்பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். துணை அதிபர் வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ ஆகியோரின் பணி மற்றும் முயற்சிகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் அதில் மிகவும் கடினமாக உழைத்தனர் என்று டிரம்ப் தனது பேட்டியில் கூறினார்.
இந்த போர் இந்தியாவின் அடி தாங்கமுடியாமல் பாகிஸ்தான் அலறிக்கொண்டு வந்து போரை நிறுத்த சொன்னதா, அல்லது இரு நாடுகளும் அமெரிக்க வர்த்தகத்துக்காக போரை நிறுத்திக்கொண்டனவா என்பது இப்போது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் வேண்டும் என்பது நமது நோக்கமல்ல, ஆனால் போர் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தில் தான் குழப்பம் நிலவுகிறது.
வர்த்தகத்துக்கு ஆசைப்பட்டு ஆபரேசன் சிந்தூர் நிறுத்தப்பட்டது என்றால் வரலாற்று பக்கங்களில் அது ஒரு கரும்புள்ளியாகத்தானே இருக்கும். இந்தியா ஒருபோதும் வர்த்தகத்திற்காக போரை நிறுத்தி இருக்காது. இது தற்காலிக போர் நிறுத்தம் தான் என்று நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் கூறியிருப்பதை நம்புவோம். இனியும் போர் எப்படி வந்தாலும் வெற்றி இந்தியாவின் பக்கம் தான் இருக்கும். ஏனென்றால் நம்மிடம் நீதி, நியாயம் இருக்கிறது. வலிமையான ராணுவம், 140 கோடி மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. எனவேஎப்போதும் வெற்றி இந்தியாவின் பக்கம் தான் இருக்கும்.