இன்னும் சற்று நேரத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏராளமான கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் பெண் ஒருவரின் புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் மே 13ஆம் தேதி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இன்னும் சற்று நேரத்தில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது