செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நேற்று முன் தினம் (ஞாயிறு) பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது70) என்பவர், 1986-ம் ஆண்டில் நடந்த வன்னியர் சங்க இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவாராம். தீவிர பா.ம.க. பற்றாளரான இவர், தன் கிராமத்தில் இருந்து ஒரு வேனில் மாநாட்டிற்கு வந்த அக்கட்சியினருடன் வந்துள்ளார். மாநாடு முடிந்து தான் வந்த வேனில் ஏறுவதற்காக திருவிடந்தையில் இருந்து சுமார் 15 கீ.மீ தூரத்தில் பட்டிபுலத்தில் நிறுத்தப்பட்ட வேனில் ஏறுவதற்காக இ.சி.ஆர். சாலை மார்க்கமாக நடந்து வந்துள்ளார். அப்போது இரவு நேரம் என்பதால் வழி தெரியாமல் சென்று அங்கு கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்பு பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அப்போது மாநாட்டு கூட்ட நெரிசல், வாகன நெரிசலால் அவருடன் வந்த அந்த கிராம பா.ம.க.வினரும், மாமல்லபுரம் போலீசாருடன் சேர்நது பல இடங்களில் தேடியும் சின்னசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசுக்கு இதுகுறித்த தகவல் சென்றவுடன், முதியவர் சின்னசாமியை கண்டுபிடிக்க மாமல்லபுரம் பா.ம.க.வினரை கொண்டு 2 குழுக்கள் அமைத்தார். இரண்டு குழுக்களை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் 20 பேர் தனித்தனியாக சென்று மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலை பகுதியில் முதியவர் சின்னசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் பட்டிபுலம் சவுக்கு தோப்பு பகுதியில் உள்ள செடிகளுக்கு மத்தியில் மயங்கி கிடந்தவரை 2 நாட்களுக்கு பிறகு மாமல்லபுரம் பா.ம.க.வினர் இன்று கண்டுபிடித்தனர். பிறகு அவரை (சின்னசாமி) ஒரு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் பூஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர். சர்க்கரை நோயாளியான அவருக்கு சுவாச கோளாறு இருந்ததால், குளுக்கோஸ் ஏற்றி, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சின்னசாமி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைகயில் சேர்க்கப்பட்ட தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
பிறகு அவரது மகன் குமார்(வயது45) என்பவர் தன் உறவினர்களுடன் ஒரு காரில் விரைந்து வந்தார். பிறகு மயக்கம் தெளிந்து குணமடைந்த தனது தந்தை முதியவர் சின்னசாமியை(பா.ம.க. தொண்;டர்) பார்த்த மகிழ்ச்சியில் கண்கலங்கினார். அவரை கண்டுபிடித்து மருத்துவமiனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றி உதவி செய்த பா.ம.க. தலைவர் அன்புமணிக்கும், மாமல்லபுரம் பா.ம.க. நிர்வாகிகளுக்கு நன்றி அவரது மகன் உறவினர்கள் சின்னசாமியை அழைத்து கொண்டு ஊர் சென்றனர்.
