தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கலந்து கொண்டு பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திராயன்-2 செயற்கைக்கோள் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் உள்ள குறைகளை கண்டறிந்து பின்பு சந்திரயான் 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். சந்திராயன் 3 திட்டம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்தது.
ஆனால், சந்திராயன்-4 நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று சாம்பிள்களை எடுத்துகொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வடிவமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். சந்திராயன் 4 திட்டம், 2027-ல் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த லேண்டர் நிலவின் தென் துருவத்துக்கு அருகில் மென்மையாக தரையிறங்கவும், மண், கல், பாறைகளின் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது பெரிய திட்டம். 2040-ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதள மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த விழாவுக்கு, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் டி.ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.பி.கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பியூலாராஜினி வரவேற்றார்.