திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் பாலாஜி (22) இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மூன்று முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். மேலும் தற்போது வரவிருக்கும் நீட் தேர்வு எழுதவும் காத்திருந்தார். இந்த நிலையில் வழக்கம்போல நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள விஷமங்கலம் ஏரிக்குச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென கால் இடறி ஏரிக்குள் விழுந்ததில் சேற்றில் சிக்கி சிறிது நேரம் போராடி உயிரிழந்து உள்ளார். பின்னர் வீடு திரும்பாத பாலாஜியை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்ற நபர்கள் ஏரியில் பாலாஜி உயிரிழந்து கிடப்பதை அறிந்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து குடும்பத்தினர் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை உபாதை கழிக்க ஏரிக்குச் சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.