Skip to content

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

கோவை மாவட்டம்  தொழில்  வளர்ச்சிக்கும்,   நல்ல  சீதோஷ்ணத்துக்கும்  பெயர் பெற்றது.  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் போற்றப்படும்  மாவட்டம் . இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் பொள்ளாச்சி,  கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் நகரம், மக்களின் மரியாதை மிகுந்த பேச்சு வழக்கு  இந்த நகருக்கு பெருமை சேர்த்து வந்தது.  தமிழ்நாட்டில் எந்த மூலையில் இளநீர் விற்றாலும்  பொள்ளாச்சி இளநீர் என்று விற்பார்கள்.  அந்த அளவு  பொள்ளாச்சி இளநீருக்கு சிறப்பு உண்டு.

அத்தகைய சிறப்பு வாய்ந்த நகரில் தான் 2019ம்  ஆண்டு இந்தியாவையே உலுக்கிய சம்பவம் நடந்தது.  ‘அண்ணா என்ன விட்டுடுங்க’ என ஒரு பெண்   கதறும்   வீடியோ, ஆடியோ  மனிதகுலத்தையே வெட்கி தலைகுனிய வைத்தது மட்டுமல்ல,   பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்தது.

மரியாதை மிகுந்த மக்கள் வாழும் பொள்ளாச்சியில் இப்படி ஒரு மாபாதகமா,  ‘ இப்படி ஒரு கொடுஞ்செயலா  என  பெண்கள்  வெகுண்டெழுந்தனர்.    ஆம் …..2019ல்  நடந்த  இந்த கொடூர சம்பவம்  பத்திரிகையாளர்கள் மூலமே வெளிக்கொண்டு வரப்பட்டது. விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.

கல்லூரி மாணவிகள்,  சமூகத்தில் அந்தஸ்து மிகுந்த பணியில் இருந்த சில பெண்கள், இளம்பெண்கள் என ஏராளமானோரை பண்ணை வீடுகளுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தோ, கடத்தி வந்தோ  கூட்டு  பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து தொடர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு,  பாதிக்கப்பட்ட பெண்களிடம் நகை, பணம் பறித்தனர். இது மூன்று  ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது.

இந்த கொடுஞ்செயலுக்கு முக்கிய புள்ளியே  பொள்ளாச்சி  விஐபி ஒருவரின் மகன்தான் என்று கூறப்பட்டது.  இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள். ஆளுங்கட்சியின் ஆசி பெற்றவர்கள்  என்றும்  பரபரப்பாக பேசப்பட்டது.

எனவே 2019ல்  போலீசார்  அவசர அவசரமாக வழக்குப்பதிந்து வழக்கை மூடி கல்லறை கட்டிவிட வேண்டும் என நினைத்தனர்.  இதற்காக அப்போதைய  கோவை எஸ்.பி.   பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை பேட்டியில் கூறினார்.  அதில் ஒரு கல்லூரி மாணவி, எந்த கல்லூரியில் படிக்கிறார் எனவும்  தெளிவுபடுத்தினார்.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரம்  வெளியில் வரக்கூடாது என்ற சட்டத்தையும் மீறி அவர் பேட்டி அளித்தார். 4 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்து விட்டு, குற்றவாளிகள் இவ்வளவு தான் என்று வழக்கை  முடிக்க பகீரத பிரயத்தனம் செய்தார்.

ஆனால் திமுக, கம்யூனிஸ்ட்கள்,  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  மகளிர் அமைப்பினர் நடத்திய போராட்டங்கள்,  சமூக ஆர்வலர்கள் ஐகோர்ட்டை அணுகி வழக்கை  சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தொடுத்த வழக்கு , இத்தனைக்கும் பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது.

புதிதாக எப்ஐஆர் போடப்பட்டு, பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன்(34), திருநாவுக்கரசு(36), சதீஷ்(35), வசந்தகுமார்(32), மணிவண்ணன்(34), ஹேரன்பால்(34), பாபு(35),அதிமுகவை சேர்ந்த  அருளானந்தம்(41)  அருண்குமார்(35) ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட 8 பெண்களில் 7  பெண்கள்   நேரடியாக வாக்குமூலம் அளித்தனர். 2023 பிப். 24 முதல் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் மூடப்பட்ட தனி அறையில் நடந்து வந்தது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தமிழகமே  எதிர்பார்த்த இந்த வழக்கில் கடந்த 13ம் தேதி  தீர்ப்பளிக்கப்பட்டது.

கைதான  9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கினார் நீதிபதி. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடாக ரூ.85 லட்சம் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்தார்.  சாட்சியம் அளித்த 7  பெண்களில், ஒருவருக்கு ரூ.25 லட்சம், இருவருக்கு தலா ரூ.15 லட்சம், இருவருக்கு தலா ரூ.10 லட்சம், ஒருவருக்கு ரூ.8 லட்சம், ஒருவருக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் 7 பேருக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். இந்த இழப்பீடு எப்படி நிர்ணயிக்கப்பட்டது, அதில் ஒருவருக்கு மட்டும் அதிகமாகவும், மற்றவர்களுக்கு குறைவாகவும் வழங்கப்பட்டு உள்ளது.  பாதிப்பின் அளவுக்கு ஏற்ப இந்த நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் தண்டனை விதிக்கப் பட்ட குற்றவாளிகள் 9 பேருக்கும்  மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் கோர்ட்டில்  திரண்டிருந்த பெண்கள் சங்கத்தினர் தீர்ப்பை வரவேற்று அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர். திமுகவினர் பட்டாசு வெடித்து நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்.  அனைத்து கட்சித்தலைவர்களும்  தீர்ப்பை வரவேற்றனர்.

பொள்ளாச்சி போன்று,  இழி செயலில் ஈடுபட்டவர்கள்,  பெண்களை  நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து விட்டால் அவர்கள் அதை யாரிடம் போய் சொல்வார்கள்?  சொன்னால் அவர்களுக்கு தான் அவமானம். எனவே யாரிடமும் சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இப்படிப்பட்ட   செயல்களில் இறங்குகிறார்கள்.   இழி செயல்களில் ஈடுபடும் அந்த கொடியவர்களின் எண்ணம் ஈடேறாத வகையில் பாதிக்கப்பட்ட பெண்கள்   தைரியமாக  வந்து சாட்சியம் அளித்தனர். அதிலும் 19 வயது பெண் தைரியமாக முன்வந்தார். அவரது சாட்சியம்  இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.   சாட்சிகளை,  கலைக்க எத்தனையோ  முயற்சிகள் நடந்தது.

ஆள் பலம், அதிகார பலம், பணபலம், அடிதடி என மிரட்டி பார்த்தனர். அத்தனை  மிரட்டல்களையும் மீறி அவர்கள் சாட்சியம் அளித்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால்  இந்த சம்பவம் நடந்த 2 வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த ஆட்சி மாற்றம் மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் சாட்சிகள்  கலைக்கப்பட்டு  இருப்பார்கள்.  ஆண்டவனுக்கே இந்த அக்கிரமம் பொறுக்கவில்லை என்பதால் ஆட்சி  மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என பொள்ளாச்சி மக்கள் கூறுகிறார்கள்.

எனவே  விசாரணை  சரியான  திசையில் சென்றது.   பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமே  எதிர்பார்த்தபடி தீர்ப்பு  கிடைத்தது.   இந்தியாவே இந்த தீர்ப்பை  வரவேற்று உள்ளது.

இனி பெண்பிள்ளைகள் குறித்து  தவறான எண்ணத்தில் பார்ப்பவர்கள்,  சீண்ட நினைப்பவர்கள்  இந்த தீர்ப்பினை  நினைத்து  பார்க்க வேண்டும்.

சாட்சியம் அளித்த 7 பெண்களுக்கு மட்டும், அவர்களது பாதிப்புக்கு ஏற்ப  நிவாரணத்தை நீதிபதி அறிவித்தார்.  அதே நேரத்தில்  முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மனிதநேயத்தோடு இந்த வழக்கை அணுகி உள்ளார்.

குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க  காரணமாக இருந்தது  பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியம் தான் . ஆளுங்கட்சியின் உருட்டல், மிரட்டல்,  போலீஸ் தரப்பில் இருந்து மிரட்டல்,  குற்றவாளிகளின்  மூலம் மிரட்டல், பணம் படைத்த சில  விஐபிக்களின் மிரட்டல் இத்தனையையும் பொருட்படுத்தாமல் சாட்சியம் அளித்தவர்களுக்கு மேலும் நிவாரணம்  அளிக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் முதல்வர் இப்போது  கோர்ட்டு அறிவித்த நிவாரண தொகை தவிர  பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேருக்கும்  மேலும் தலா ரூ.25 லட்சம் நிவாரணத்தையும் அறிவித்து உள்ளார்.

நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. அந்த வகையில், கோர்ட்டு உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகையாகிய ரூ.85 லட்சத்திற்கும் கூடுதலாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் என நிவாரணத் தொகையை  அறிவிக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து  உள்ளார்.

பல்வேறு பெண்கள் அமைப்புகள், நிவாரணத்தொகை கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல்வர் உடனடியாக இதனை அறிவித்து உள்ளார்.  பெண்களின் பாதுகாப்பு,  நலன், ஆகியவற்றுக்கு எப்போதும்  முன்னுரிமை அளிக்கும் முதல்வரின் இந்த  அறிவிப்பு  பாராட்டுக்குரியது.

ஒழுக்கத்தை  உயிரினும் மேலாக கருதும் பெண்களுக்கு  எவ்வளவு நிவாரணம் அளித்தாலும் ஈடாகாது  என்றாலும், இந்த தொகை அவர்களுக்கு சற்று ஆறுதலும், தேறுதலும் தரும் என்பது மட்டும் உறுதி.

இந்த தீர்ப்பின் மூலம் இனி தீயவர்கள் திருந்துவார்கள், தமிழ்நாட்டில்  இனி இப்படிப்பட்ட கொடூரபுத்திக்காரர்கள் தலையெடுக்க மாட்டார்கள் என்றும்  நம்புவோம்.

 

error: Content is protected !!