கோவை, மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாய் யானை அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை வனசரகர் திருமூர்த்தி தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை கண்காணித்து வந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக தாயான உடல்நிலை குறைவால் மயங்கி விழுந்தது.
மயங்கி விழுந்த தாய் யானை உடலில் சிறிது நேரத்திற்கு பின் அசைவு தெரியவே, அருகில் இருந்த குட்டி யானை பதற்றம் அடைந்தது. தனது தாயை எப்படியாவது ? எழுப்பி விட வேண்டும் என்று தவிப்புடன் தனது சிறிய தும்பிக்கையால் தாயின் உடலை தட்டி எழுப்ப முயற்சித்தது.
யானையின் நிலைமை மோசம் அடையவே, வனத் துறையினர் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.
அவர்களின் அறிவுறுத்தலின் படி கால்நடை மருத்துவ குழுவினரும் கோவை வனக் குழுவினரும் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை முதல் ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் படுத்து கிடந்த பெண் யானையை நிற்க வைக்க சிகிச்சை அளிப்பதற்காக, கும்கி யானை துரியன் உதவியுடன் சிகிச்சை மேற்கொண்டுள்ளப்பட்டு வந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கு, சிரமம் ஏற்படும் என்பதற்காக சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானை வர வழைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தனர். மேலும் அந்தப் பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று யானை உயிரிழந்தது.
உயிரிழந்த யானையின் வயிற்றில் ஒரு ஆண் குட்டி இருந்தது. கர்ப்பமாக இருந்த நிலையில் யானை இறந்து உள்ளது. மேலும் அந்த யானையின் இரைப்பையில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகளால் தான் யானை இறந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.
