பாபநாசம் அருகே கொள்ளிடம் கரையோரத்தில் அமைந்துள்ளது சருக்கை ஊராட்சி . இதில் வட சருக்கை தட்டுமால் படுகை பகுதியில், சாக்லேட் தயாரிக்க மூலப் பொருளாக பயன்படும் தோட்டக்கலை பயிரான கொக்கோ சாகுபடியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளார் பாபநாசம் அடுத்த ராஜகிரி பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி முகமது ரபீக்.
சத்து, மற்றும் சாக்லேட் பயிராக கருதப்படும் கொக்கோவானது மைலோ, பூஸ்ட் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் காட்பரிஸ் சாக்லெட் தயாரிப்புக்கு பயன்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகிறது. ஒரு ஏக்கரில் 25 அடிக்கு ஒரு தென்னை மரக் கன்று வைத்தால், 75 மரக் கன்று நடலாம். ஒரு தென்னைக்கும், மற்றொரு தென்னைக்கும் நடுவில் கொக்கோ செடியை நடலாம். ஒரு ஏக்கருக்கு 200 செடிகளை நடலாம். கொக்கோ செடி இரண்டரை வருடத்தில் பூக்கத் தொடங்கும். 3 வது வருடத்திலிருந்து பலன் தரத் தொடங்கும். நாலைந்து வருடத்தில் நல்ல பலனைத் தரும். இதிலிருந்து உதிரும் இலைகள், சருகாகி உரமாகிறது. அங்கக சத்தை தருகின்றன. இலைகள் மண்ணை மூடுகின்றன. இது உயர்தர மூடாக்கு ஆகும். தழை கட்டுப் பாடு இயற்கையாக கிடைக்கிறது. தென்னை, கொக்கோவால் நல்ல பலன் கிடைக்கிறது.
இது குறித்து கொக்கோ சாகுபடி யில் ஈடுபட்டுள்ள ராஜகிரி முன்னோடி விவசாயி முகமது ரபீக் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் முதன் முதலாக பாபநாசம் அருகே வட சருக்கை தட்டு மால் படுகையில் பத்து ஏக்கரில் நான் தான் கொக்கோ சாகுபடி செய்யத் தொடங்கினேன். கொக்கோ குறுமரம். இதை சுமார் 10 அடிக்கு மேல் வளர விடுவதில்லை. இல்லையென்றால் காய் பறிப்பதில், சூரிய வெளிச்சம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். கொக்கோ பயிரை கடந்த 2008 ம் ஆண்டிலிருந்து சாகுபடிச் செய்து வருகிறேன். கொக்கோ மரம் உற்பத்தி செய்ய ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகின்றது. பழத்தை பறித்து, உடைத்து, பருப்பை எடுத்து, 3 நாள் புழுக்கத்தில வைத்து, அதை எடுத்து உலர வைத்து விதை எடுக்கப் படுகிறது. ஒரு ஏக்கருக்கு 200 கிலோவில் இருந்து 250 கிலோ வரை மகசூல் கிடைக்கின்றன. இது தென்னை மரத்திற்கு மிகச்சிறந்த ஊடுபயிராக உள்ளது. மரம் மற்றும் செடிகளிலிருந்து விழும் சருகுகளை உரமாகப் பயன்படுத்தி, இயற்கையாக வளர்வதால் அதிக உர பயன்பாடு கிடையாது. விவசாயிக்கு சுமார் 25 ஆண்டு வரை வருமானம் ஈட்டி தருகின்றன. இரண்டாயிரத்து இருபத்திரண்டு, இருபத்தி மூணாம் ஆண்டுல கிலோ ரூ 200 ல் இருந்து ரூ 250 என கொள்முதல் விலை இருந்தது, தற்போது ரூ 450 வரை போகிறது.
தற்போது இயற்கை சூழல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட விலை கூடியிருக்கலாம். தோட்டக் கலைத் துறையினர் என் தோட்டத்தை பார்வையிட்டு பொட்டாஷ் உரத்தை அதிகமாக போட பரிந்துரைத்தனர். ரூ கோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்க, அதன் எதிரியான ஒட்டுண்ணியான குளவியை கொண்டு வந்து விட்டுள்ளனர். இதற்காக பாபநாசம் தோட்டக் கலைத் துறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
