மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன் என்பவரது மகள் அபிநயா(29). 2023ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். நாகை மாவட்ட ஆயுதப்படைக் காவலராக பணியாற்றிய அபிநயா, நேற்று முன்தினம் இரவு நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று காலை அபிநயா பாதுகாப்பு பணியில் இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இன்னொரு பெண் போலீசான சிநேகா அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த அறை உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது.
உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி. அருண் கபிலன் மற்றும் போலீசார் வந்து அந்த அறையை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அபிநயா இருக்கையில் அமர்ந்தபடி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. அவரது கழுத்தின் இடதுபக்கம் குண்டு பாய்ந்திருந்தது.
இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இது தொடர்பாக நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.
மருத்துவ விடுப்பில் சென்றிருந்த அபிநயா 5 நாட்களுக்கு முன்பு பணிக்கு திரும்பிய நிலையில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிநயாவுக்கு திருமணம் முடிந்து விவாகரத்தானவர் . இந்த நிலையில் அபிநயாவுக்கும் இன்னொரு போலீஸ்காரருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்த விவகாரம் அந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு தெரியவந்ததால் அவர் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அபிநயாவும் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.