முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன் மக்களுக்கான நலத்திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறார். கடந்த 10 தினங்களாக அவர் கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று கரூர் வெண்ணைமலை அருகே உள்ள அட்லஸ் கலையரங்கில், கரூர் மாவட்டத்தில் உள்ள 1275 பொதுமக்களுக்கு விலையில்லா
வீட்டு மனை பட்டா வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜோதிமணி எம்.பி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி ,குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் , மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட, ஒன்றிய நகர ,பேரூர், திமுகழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக வருகை தந்த செந்தில் பாலாஜிக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து , ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டா பெற்ற மக்கள் மகிழ்ச்சியில் செந்தில் பாலாஜியை வாழ்த்தி, முழக்கமிட்டனர்.
