தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி பகுதியில் கடந்த 29.03.2022-ம் தேதி 15 வயது சிறுமியை அவரது பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகார் வாக்குமுலத்தின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கினை புலன்விசாரணை செய்த காவல் ஆய்வாளர் ஜெயந்தி மேற்கொண்டு முன்னையம்பட்டி, அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த தனிஷ் ராஜ்(50) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, பின்னர் இவ்வழக்கின் புலன்விசாரணையை முடித்து எதிரியின் மீது 11.08.2023-ம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் சாட்சிகளை விசாரணை செய்த தஞ்சாவூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி மேற்படி வழக்கின் எதிரிக்கு சட்டபிரிவு 3(2), 4(2)-ன் படி 7 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5000/-அபராதம் கட்டத்தவறினால் 6 மாத சிறைதண்டனையும், போக்சோ சட்டப்பிரிவு 6-ன் படி ஆயுள் தண்டனை மற்றும் ரு.10,000/- அபராத தொகையும் கட்டத்தவறினால் 8 மாத சிறைதண்டனையும் மற்றும் சட்டப்பிரிவு 506(i)-ன் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ.6,00,000/- நிவாரணத் தொகையாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் நீதிமன்றக் காவலர் சாவித்ரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சசிரேகா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினர்.