கர்நாடக மாநிலம் தேவேந்திர கிரியில் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் திருச்சியில் இருந்து நான்கு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகன் ஸ்குவாட் பிரிவில் 412 கிலோ எடையைத்தூக்கியும், ஒட்டுமொத்தமாக 950 கிலோ எடையைத்தூக்கி புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
அதேபோன்று ராஜேஸ்வரி என்ற வீராங்கனை டெட்லிப்ட் முறையில் 214 கிலோ எடையினைத் தூக்கி புதிய தேசிய சாதனையினை நிகழ்த்தியுள்ளார். அதே போன்று வேல்முருகன் என்ற மாணவர் சப் ஜூனியர் பிரிவில் தங்கப்பதக்கமும், சிறந்த வலுத்தூக்குபவர் விருதையும் பெற்றுள்ளார். அதேபோன்று செல்வராணி என்ற வீராங்கனை பெஞ்ச்பிரஸ் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.
பதக்கங்களை குவித்து தமிழகத்திற்கும் திருச்சிக்கும் பெருமை சேர்த்த வீரர் வீராங்கனைகள் இன்று ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தனர். ரயில்நிலையத்தில் அவர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினர், விளையாட்டுஆர்வலர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச அளவிலான மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்குவது போல தமிழக அரசும், அரசுவேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் அதேபோன்று முதலமைச்சர் கோப்பை போட்டிகளிலும் வலுத்தூக்கும் போட்டியினை சேர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.