சிவகங்கை மாவட்டம் திருபுவனம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் கோவில் காவலாளி அஜீத்குமார் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக 2 ஏட்டு, 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மானாமதுரை டிஎஸ்பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எஸ்.பி. ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளிட் ஆகியோர், சரமாரி கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர். அப்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ் குமார், நேரில் ஆஜராகி அஜீத்குமாரின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை சமா்ப்பித்தார்.
அதில், 44 இடங்களில் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. போலீசார் தாக்கியதில் தான் அஜீத்குமார் இறந்ததாக கூறப்பட்டு உள்ளது. ஏன் அவரை அடித்தார்கள். அஜீத் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கறையை ஏன் சேகரிக்கவில்லை என போலீசாருக்கு கேள்வி விடுத்த நீதிபதிகள், எப்.ஐ.ஆர் கூட போடாமல் எப்படி விசாரணை நடத்தினீர்கள். மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது என்றும் கூறிய நீதிபதிகள், இந்த மரணத்திற்கு யாா் பொறுப்பேற்பது என்றும் கேட்டார்.
கோவில் சிசிடிவி காட்சிகளையும்கேட்ட நீதிபதி, குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடுகள் உள்ளது என்றும் கடுமையாக சாடினர்.
காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை. அதன் சிசிடிவி காட்சிகள் எங்கே என கேட்ட நீதிபதிகள், அஜீத்குமாா் தாக்கப்படுவதை எங்கிருந்து வீடியோ எடுத்தீர்கள் என கேட்டார். அதற்கு கோவில் ஊழியர், கழிவறையில் இருந்து வீடியோ எடுத்தேன் என்றார்.
அஜீத்குமார் கொலை செய்யப்பட்டு உள்ளார். அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே மற்ற மனுக்கள் தேவையற்றவை. காவலர்கள் கைது செய்யப்பட்டது கண்துடைப்பு. காவல்துறையில் ஏற்பட்ட மரணமாக விசாரிப்பதாக அரசு கூறி உள்ளது. தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பு கூறி உள்ளது. இது தொடர்பாக 2நாளில் விரிவான அறிக்கை அளிக்கிறோம் என்றும் கூறி உள்ளனர்.
வரும் காலங்களில் போலீசார் இப்படி செயல்படக்கூடாது. அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. கல்வியறிப்பு அதிகமுள்ள தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் ஆபத்தானது. இந்த தாக்குதல் நிகழ்வை அரங்கேற்றியது யார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறப்பு குழு நடவடிக்கையை கண்காணிக்க தவறிய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தை யாரும் மறக்க இயலாது.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் ஆண் உறுப்பு, வாய் , காது போன்ற உறுப்புகளில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை செய்து அடித்திருக்கிறார்கள்.
அஜீத்தின் தாயார் அளித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் தருவதாக பேரம் பேசி உள்ளனர். 28ம் தேதி மாலை வரை இந்த வழக்கில் FIR போடவில்லை. சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. சிபிசிஐடி சிறப்பு குழுவை கொண்டு நியாயமாக விசாரிக்க வேண்டும்.உயர் அதிகாரிகள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்பவர்கள் கூட இப்படி தாக்கமாட்டார்கள். மிருகத்தனமாக தாக்கி உள்ளனர்.
அரசு தரப்பு: நிச்சயம் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்கிறோம். நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் அறிக்கை இருக்கும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. இவ்வாறு கோர்ட்டில் வாதங்கள் நடந்தது.