திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பழனிச்சாமி சாலையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது . இந்த காய்கறி மார்க்கெட் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனர். இந்த நிலையில் இந்த மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் மார்க்கெட்டிற்குள் வியாபாரம் செய்ய இடம் இல்லாததால் விவசாயிகளும், சில வியாபாரிகளும் மார்க்கெட்டிற்கு வெளியே திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் சாலையோரம் தங்களின் காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும் சாலையோரம் வியாபாரம் செய்யும் விவசாயிகளும் வியாபாரிகளும் நகராட்சிக்கு தினசரி ஐம்பது ரூபாய் சுங்க கட்டணம் செலுத்தி வரும் நிலையில் திடீரென இன்று விடியற்காலை திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சாந்தி மார்கெட்டிற்கு வெளிப்புறத்தில் கடை போட்டு வியாபாரம்
செய்யக்கூடாது என கூறியதாக நகராட்சி பணியாளர்கள் சாலையோரம் போடப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என கூறியதாகவும் மேலும் கடை போட்டால் அனைத்து காய்கறிகளையும் கொண்டு சென்று குப்பையில் கொட்டப்படும் என நகராட்சி பணியாளர்கள் கூறியதால் வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர்.
இதன் காரணமாக சாலையோரம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளும், விவசாயிகளும் திடீரென திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் லாரி மற்றும் அரசு பேருந்தை சிறைபிடித்து திடீரென 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.