Skip to content

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தி  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“திராவிட மாடல் ஆட்சியில் இந்துசமய அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது. பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியில் 3177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளோம். 7,000க்கு மேற்பட்ட ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. 12,000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் வசிக்கின்ற பகுதியில் 5000 கோயில்களுக்கு நிதி உதவி செய்துள்ளோம். மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் ஆன்மிக பயணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளோம். 29 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம். 41 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம்.

அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள், பொங்கல் கருணை தொகை என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,326 இணையர்களுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. வெறுப்பையும் சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் எங்களை பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் திமுக அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன்.”இவ்வாறு பேசினார்.

error: Content is protected !!