தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பேசியதாவது: சீர்காழி கோவிந்தராஜ் நகரை சேர்ந்த மாதவி என்பவர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டது குறித்து தமிழக முதல்வருக்கு சமூக வலைதளங்களில் வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதைக் கண்ட தமிழக முதல்வர், உடனடியாக மாதவிக்கு உதவி செய் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் தகவல் சொல்ல, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கேட்டபோது வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தனக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கூறியதை அடுத்து அவர் உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவர் செலவுக்காக மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து ரூபாய் 50 ஆயிரம் காசோலையையும் வழங்கினார் இது தமிழக முதல்வரின் செயல்பாடு. உலகமெல்லாம் சுற்றும் பிரதமர் மோடி மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டு கொள்வே இல்லை. இருவரையும் ஒப்பிட்டு பாருங்கள் நமது முதல்வர் இந்தியாவின் 100 கோடி மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார், பாதிக்கப்பட்ட விளிம்பில் உள்ள மக்களுக்கான தலைவராக நம் தலைவர் உள்ளார் என பேசினார்.