2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 30 விழுக்காடு வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்த ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் திரளாக பங்கேற்று இருந்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்…
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் வஞ்சிக்கிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி சொற்ப அளவிலான நிதியையே பெறும் நிலை உள்ளது.
கல்வி நிதியாக ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை கூட தராமல் அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியை தருவோம் என்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் கூறியதைப் போல ஓரணியில் தமிழ்நாடு என்பதை செயல்படுத்தும் வகையில் நாளை முதல் வீடு வீடாக சென்று ஒவ்வொரு பகுதியிலும் 30% வாக்காளர்களை திமுகவின் உறுப்பினராக இணைக்கும் பணியில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில்...
நம்முடைய முதலமைச்சர் தேர்தலுக்கான 60% பணியை முடிக்க வேண்டும் என்பதற்காகவே 30 சதவீத வாக்காளர்களை ஓரணியில் திரட்ட முதலமைச்சர் முடிவு செய்துள்ளார்.
தலைவரை தாண்டிலும் கொள்கை பிடிப்பில் நிலையாக இருப்பவர் முதலமைச்சர்.
ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை வைத்தெல்லாம் மிரட்டுகிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் கடந்து நீதிமன்றத்தின் மூலமாக வெற்றி கண்டு வருபவர் முதலமைச்சர். இந்தியாவிலேயே தைரியமான முதலமைச்சராக இருப்பவர் தான் தமிழக முதலமைச்சர் .
எந்த காலத்திலும் இப்படி ஒரு கவர்னர் இருந்து பார்த்ததில்லை. வனத்துறை சட்டம் இயற்றி ஆறு மாத காலமாகி தற்போது தான் கையெழுத்திடுகிறார்.
நம்முடைய கூட்டணி மிக சிறப்பாக யாரையும் விட்டுவிடாமல் சுமூக உறவோடு கூட்டணியை வைத்துள்ளோம்.
ஆனால் எதிரில் உள்ள கூட்டணி ஒரு நாள் சென்னைக்கு வருகிற போது அதிமுக தலைமையில் கூட்டணி என்கின்றனர். மறுநாள் மதுரைக்கு வரும் பொழுது பாஜக கூட்டணி அமைச்சரவை என்கின்றனர். பாஜகவுடன் சேர்ந்ததினால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் நல்ல வாய்ப்பு. இரண்டு முறை தோல்வியுற்றும் தற்போது வரை திருந்தாமல் அவர்களுடன் இணைந்து, கொள்கை எல்லாம் விட்டுக்கொடுத்து எதையும் கேட்காமல் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதை எல்லாம் முறியடிக்கிற வகையில் நாம் செயல்பட வேண்டும்.
வருகின்ற தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக அளவில் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் வகையில் தலைவர் யாரை நிறுத்தினாலும் அவரை அதிவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய நாம் பாடுபட வேண்டும் என்றார்.