களத்துக்கு வந்துவிட்டார் தவெக தலைவர் விஜய்
‘களம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. -வீரர்கள் தான் அவ்வப்போது வந்து போகிறார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தவெக தலைவர் நடிகர் விஜய் இப்போது களத்துக்கு நேரடியாக வந்து விட்டார். இனி work from home என்று அவரை கேலி கிண்டல் செய்ய முடியாது என்ற அளவுக்கு…….. வந்துட்டேன்னு …… சொல்லு என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சொல்லி அடித்திருக்கிறார்.
ஆம் …… சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜீத்குமார் வீட்டுக்கு தவெக தலைவர் விஜய் நேற்று நேரடியாக வந்து ஆறுதல் கூறி, உதவியும் செய்து விட்டு சென்றிருக்கிறார்.
மடப்புரம் கோவில் காவலாளி அஜீத்குமார், மீது நிகிதா என்ற பெண் சுமத்திய திருட்டுப்பட்டத்தால், விசாரணை என்ற பெயரில் அஜீத்குமாரை போலீசார் அடித்தே கொன்று விட்டனர்.
உண்மையில் நகை திருட்டு போனதா, யார் இந்த நிகிதா, அவர் ஏன் இப்படி ஒரு பழியை சுமத்தினார் என விசாரிததால் மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவருகிறது.
நிகிதா ஒரு மருத்துவர் அல்ல, முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். சம்பவத்தன்று தனது தாயார் சிவகாமியுடன் கோவிலுக்கு வந்து உள்ளார். நிகிதா மீதும் ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாக இப்போது கூறப்படுகிறது. இப்பேர்பட்டவரின் சொல்லை கேட்டு போலீசார் ஏன் இப்படி கொடூர செயலில் ஈடுபட்டனர் என்பது விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும்.
சரி…… நாம் விஷயத்துக்கு வருவோம். ……
அஜீத்குமாருக்கு ஏற்பட்ட கதி இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எச்சரிக்கையாக கூறியதுடன், வழக்கை பாரபட்சமின்றி சிபிஐக்கு மாற்றிவிட்டார்.
இந்த விஷயத்தில் தமிழகமே அஜீத்குமார் குடும்பத்துக்கு ஆதரவாக நின்றதை பார்க்கும்போது, தமிழகத்தில் இன்னும் மனிதாபிமானம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அந்த போலீஸ்காரர்களுக்கு மட்டும் ஏன் மனிதாபிமானம் மறைந்து போனது என்று தெரியவில்லை. கொலைவெறியாட்டம் ஆடும் அளவுக்கு அவர்களை உசுப்பி விட்டது யார் என்பதையும் வெளிக்கொணர வேண்டும்.
அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டித்தனர். அஜீத்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்……. உதவினர்.
முதல்வர் ஸ்டாலின் போனில் அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், அஜீத்தின் தம்பிக்கு அரசு பணி வழங்கி, வீட்டுமனை பட்டாவும் கொடுத்து தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறி தேற்றினார்.
அடுத்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் ஆறுதல் கூறினார். விசிக தலைவர் திருமாவளவன், தவாக தலைவர் வேல்முருகன் ………இப்படி பெரும்பாலான கட்சித்தலைவர்கள் அங்கு போய் ஆறுதல் தெரிவித்த நிலையில்,
நேற்று இரவு திடீரென தவெக தலைவர் விஜய், மடப்புரத்தில் உள்ள அஜீத் வீட்டுக்கு காரில் வந்திறங்கினார். அதுவரை அவர் வருவது உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கு கூட தெரியாது. இதுபற்றி கட்சி மேலிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் மடப்புரம் வந்தார். இரவு 7 மணிக்கு அஜீத்குமார் வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து நடிகர் விஜய் இறங்கி அஜீத் வீட்டுக்குள் சென்றார்.
வீட்டில் இருந்தவர்களுக்கு கூட வந்திருப்பவர் விஜய் தானா, என்பதை உறுதி செய்ய நேரம் பிடித்தது. என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தவித்தனர். வீட்டுக்குள் சென்ற விஜய், அஜித் படத்துக்கு மாலை அணிவித்து அங்கிருந்த அஜித்தின் தாயார், தம்பி ஆகியோருக்கு ஆறுதல் கூறி சிறிது நேரம் நடந்த சம்பவங்களை கேட்டார்.
பின்னர் ரூ.2 லட்சம் நிதி உதவியை அளித்து விட்டு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அதற்குள் விஜய் வந்திருக்கும் செய்தி ஊர் முழுவதும் பரவியது. மக்கள் திரண்டு வநதனர். எனவே விஜய் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
ஏற்கனவே நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன் நீட் தேர்வால் தற்கொலை செய்த அரியலூர் அனிதா வீட்டுக்கு சென்றபோதும் தனியாக சென்று நிதி உதவி அளித்து விட்டு திரும்பினார். இதுபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் விஜய் தனியாக சென்று இறந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இப்போது மடப்புரத்திற்கும் எந்த முன்னறிவிப்பும் இன்றி வந்து சென்று உள்ளார். இதுபோன்ற ஒரு துக்ககரமான நிகழ்ச்சி நடந்த வீட்டுக்கு செல்லும்போது முன்னறிவிப்பு செய்து கூட்டத்தை கூட்டி அதில் அரசியல் லாபம் பார்க்க எண்ணாமல், விஜய் அடித்த இந்த ரகசிய விசிட் உள்ளபடியே பாராட்டத்தக்கது.
அவர் அறிவிப்பு செய்து வந்திருந்தால், அவரது ரசிர்கள் திரண்டு மேலும் பிரச்னைகளைத்தான் உருவாக்கி இருப்பார்கள். அதை தவிர்க்க விஜய் செய்த இந்த செயல் போலீசாருக்கும் நிம்மதியை தந்து உள்ளது.
தன்னை இன்னும் நேரடி அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லும் கட்சிகளுக்கு பதில் அளிக்கும் வகையில், எப்போ….. வரணுமோ…. அப்போ வந்து நிப்பேன்னு ரஜினி பாணியில் அவர் சொல்லி இருக்கிறார். இதுதான் விஜய் அரசியல் …..
விஜய்யின் நேரடி அரசியல் களத்திற்கு இது ஒரு முன்னோட்டம் என்றும் இனி அதிரடிகள் இருக்கும் என்றும் விஜய் கட்சியினர் கூறுகிறார்கள்.