சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகிதா, மதுரை திருமங்கலம் ஆலம்பட்டியைச் சேர்ந்தவர். திண்டுக்கல்லில் உள்ள எம்.பி. முத்தையா அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல்துறைத் தலைவராக பணிபுரிகிறார். தற்போது அவர் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். நாளையுடன் அவரது மருத்துவ விடுப்பு முடிவடைகிறது.
நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள், தாயார் சிவகாமி அம்மாள், சகோதரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதேவி, உறவினர் பகத்சிங் ஆகியோர் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று கோடிகணக்கில் மோசடி செய்திருப்பதாக ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2010-ல் நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள் துணை ஆட்சியராகப் பணியாற்றியபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக, நிகிதா குடும்பத்தினர் மீது வழக்கு உள்ளது.அப்போது தான் நிகிதா பல உயர் அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த செல்வத்திடம் ரூ.25 லட்சம், ஆலம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கொடி, முருகேசன் ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மொக்கமாயன், மணிமேகலை ஆகியோரிடமும் பணம் பெற்று, நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆலம்பட்டியில் உள்ள ஜெயபெருமாளுக்கு சொந்தமான வீட்டை தனியார் கல்லூரிமேலாளர் பாசில் மன்சிங் என்பவரிடம் விற்றதிலும் புகார் உள்ளது.
நிகிதா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பாசில் மன்சிங், முத்துக்கொடி, முருகேசன், தெய்வம், வினோத்குமார் உள்ளிட்டோர் திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் நேற்று மீண்டும் புகார் மனு அளித்தனர்.
நிகிதா, கல்லூரியிலும் தனது சேட்டைகளை அரங்கேற்றி உள்ளார். மாணவிகள், உடன் பணிபுரியும் பேராசிரியைகள், அலுவலர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து இடையூறு தரும் வகையில், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தாவரவியல் துறை துணைத் தலைவராக இருந்தபோது கல்லூரி மாணவிகள் சிலர், ‘எங்களை மனரீதியாகத் துன்புறுத்துகிறார். தகாத வார்த்தைகளால் பேசுகிறார், எனவே, நிகிதாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்’ என 2024 மே மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த பூங்கொடியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதோடு நின்றுவிடவில்லை, நிகிதா ஒரு கல்யாண ராணியாகவும் இருந்து உள்ளார். வடிவேலு ஏட்டாக நடித்த மருதமலை என்ற திரைப்படத்தில் ஒரு பெண்ணுக்கு 4 கணவர்கள் உரிமைகோரி போலீஸ் நிலையம் வருவார்கள். இதுபோல நிகிதாவின் கணவர்கள் லிஸ்டும் நீண்டு கொண்டே போகும் என திண்டுக்கல் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இவரது முன்னாள் 4 வது கணவர் திருமாறன். இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவராக இருக்கிறார்.
அவர் நிகிதா குறித்து கூறியதாவது:
21 ஆண்டுகளுக்கு முன் எனக்கும், நிகிதாவுக்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு பால்பழம் சாப்பிட சென்றபோது (முதலிரவு) நிகிதா ஓடிவிட்டார். இதுபற்றி மறுநாள் அவருடைய வீட்டுக்கு சென்று கேட்டபோது, ஏற்கனவே அவருக்கு 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது என்ற தகவல் கிடைத்தது.
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை புகார் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதன் மூலம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவருக்கு சப்போர்ட்டாக பல அதிகாரிகள் வருவார்கள். அன்றைக்கும் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
எனவே நிகிதாவுடன் தொடர்பில் உள்ள அதிகாரிகள் அழுத்தத்தால் தான் அஜித்குமாரும் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் நிகிதாவிடம் ஏமாந்த கணவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என்று திண்டுக்க்கல் பகுதியில் பரபரப்புடன் பேசப்படுகிறது.
இத்தனை திலலாலங்கடி வேலைகள் செய்த நிகிதா மாணவிகளிடம் எப்படி நடந்து கொண்டார் எனவும் விசாரிக்க வேண்டும் என்று திண்டுக்கல் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.