சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அஜித் குமாரின் வழக்கில் முறையான தீர்ப்பு வழங்க வேண்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் அவர்களை சொத்துக்களை பறிமுதல் செய்து அஜித்குமார் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு சட்டக்கல்லூரி வளாகம் முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அஜித்குமாரின் புகைப்படம் பொருந்திய பதாகைகள் மற்றும் துண்டு பிரச்சாரங்களை வைத்து நீதி வேண்டும் என முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.