தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவில்களுள் ஒன்றாக தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் திகழ்கிறது.
தஞ்சாவூரில் சுதர்சன ஆழ்வார் என்கிற சக்கரத்தாழ்வாருக்கு என்றுள்ள ஒரே கோவில் இதுவாகும். இங்கு மூலஸ்தானத்தில் சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் இருப்பது தனிச்சிறப்பாகும்.
பக்தர்கள் சுதர்சன ஜெயந்தி அன்று 24 தீபமேற்றி 24 வலம் வந்து சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் அடுத்த வருடத்திற்குள் (சுதர்சன ஜெயந்தி விழாவுக்கு முன்பாக) நிறைவேறும் என்பது ஐதீகம். இக்கோவிலில் மாதந்தோறும் சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே 3 சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். ஆண்டுதோறும் ஆனி மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று சுதர்சன ஜெயந்தி விழா மிக சிறப்பாக கோவிலில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) ராஜகோபால சுவாமி கோவிலில் சுதர்சன ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலையில் மகா சுதர்சன ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மூலவர் சக்கரத்தாழ்வாருக்கு விஷேச சிறப்பு திருமஞ்சனமும், அதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பின்னர், மாலை 6 மணிக்கு அஷ்ட புஜ சக்கரத்தாழ்வார் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து, 4 ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு விமரிசையாக நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணிப்பாளர் ரவி மற்றும் சித்திரை நட்சத்திரம் கைங்கர்யம் தொண்டர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
