அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் நிறுத்தாமல், சாலைஓர உணவகங்களில் நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்… உணவகத்திற்கே சென்று கண்டித்து அறிவுரை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர்… வீடியோ இணையத்தில் வைரல்…
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நேற்று கோவையில் 100 புதிய அரசுப் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த பின்னர், இரவு கரூர் வழியாக தனது சொந்த ஊரான அரியலூருக்கு தனது காரில் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாயனூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது அரசுப் பேருந்துகள் சில அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் நிறுத்தாமல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாலைஓர உணவகங்களில் நிறுத்தி பயணிகளை டீ, காபி உள்ளிட்ட உணவுகளை உட்கொள்ள இறக்கி விட்டுள்ளனர்.
இதனைக் கண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது காரிலிருந்து இறங்கி அந்த உணவகத்திற்கு நடந்து சென்று, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை அழைத்து இந்த உணவகத்தில் நிறுத்த அனுமதி உண்டா? என கேள்வி எழுப்பினார். நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவகத்தில் நிறுத்திச் சென்று விடுவீர்கள். நாளைக்கு ஏதும் பிரச்சினை என்றால் யார் பதில் சொல்ல வேண்டி வரும்?
டீ குடித்துவிட்டு விலை அதிகம் உள்ளது. அரசு அனுமதிக்கப்படாத உணவகங்களில் பேருந்தை நிறுத்துகின்றனர் என பயணிகள் குற்றச்சாட்டு வைத்தால், நீங்கள் பதில் சொல்வீர்களா? (அ) CM பதில் சொல்லனுமா? நீங்கள் போய்டுவீங்க, யாருக்கு கெட்ட பெயர்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். நீங்கள் செய்யும் செயலால் அரசுக்குத்தான் கெட்ட பெயர் என எச்சரித்தார்.
இதற்கிடையில் தன்னுடன் வந்தவர்களை பயணிகள் போல டீக்கடையில் டீ அருந்தச் செய்து டீ மற்றும் பிஸ்கெட் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகம் இருந்ததையும் கண்டறிந்துள்ளார். இதுபோல் இனி நடக்கக்கூடாது என எச்சரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. கடந்த மாதம் இதேப்போல சென்னை செல்லும் அரசுப்பேருந்து ஒன்று, ஊர் பெயர் பலகையின் முகப்பு விளக்கு அணைந்திருந்தது. அந்த பேருந்தை நடுவழியிலேயே நிறுத்தி அமைச்சர் எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடையே கவனம் பெற்ற வருகிறது.