நாமக்கல் அடுத்த மோகனுார், அன்பு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,(56) திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலராக பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, (51) மோகனுார் ஒன்றியம் ஆண்டாபுரம் பஞ்சாயத்து துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதியின் மகள் சம்யுக்தா, (25) வெளிநாட்டில் எம்.பி.ஏ., படித்து முடித்துள்ளார். மகன் ஆதித்யா, (21) எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார்.
நேற்று அதிகாலை, சுப்ரமணியன், பிரமிளா, இருவரும் நாமக்கல் – மோகனுார் சாலையில் வகுரம்பட்டி அருகே ரயில் பாதையில், சரக்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
சுப்ரமணியன் தலை துண்டிக்கப்பட்டும், பிரமிளா உடல் சிதைந்தும் பலியாகினர். சேலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில்வே போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் , ‘ சம்யுக்தா ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு, பெற்றோர் – மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மகள் காதலனையே திருமணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்துஉள்ளார்.
வெளிநாடு அனுப்பி படிக்க வைத்த மகள் இப்படி சொல்பேச்சு கேட்காமல் இருக்கிறாளே என வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்பிரமணியனும், பிரமிளாவும் நேற்று காலை ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.