தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பயணங்களை இப்போதே அதிமுக தொடங்கி விட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வன பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார். முதல்கட்ட பிரசாரம் வரும் 23ம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் கட்ட பிரசாரத்தில் 33 தொகுதிகளுக்கு செல்கிறார். 23ம் தேதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பின்னர், தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுடன் கலந்துறையாடினார்.
4.35 மணிக்கு, மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை, காந்திசிலை அருகே ரோடுஷோவில் கலந்து கொண்டு பொது மக்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து அவர் மேட்டுப்பாளையம், காரமடை, கவுண்டம்பாளையம் , துடியலூர்ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 9 மணிக்கு சரவணம்பட்டியில் பிரசாரம் செய்கிறார்.
நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் கோவை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. அந்த பாதுகாப்புடன் பிரசாரம் செய்து வருகிறார்.