மனைவியிடம் தகாத உறவை துண்டித்த பின், மீண்டும் தகாத உறவைத் தொடர அழைத்தவரை, இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற கணவன்: ஆயுள்தண்டனையுடன், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.
அரியலூர் மாவட்டம் கோவில் வாசனை வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கௌதமி. கௌதமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த மனோகர் என்பவருக்கும், தகாத உறவு இருந்தாக கூறப்படுகிறது. இருவரின் தகாத உறவு குடும்பத்தினருக்கு தெரிந்த பின், ஊரார் முன்னிலையில் கண்டித்து பின் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விஜயகாந்த் தனது மனைவி கௌதமி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, சென்னை திருவேற்காட்டில் குடியேறியுள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின் கடந்த 2023-ஆம் ஆண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி இரவு மனோகர் தனது மனைவியிடம் சீட்டு பணம் பிடித்தல் தொடர்பான கூட்டத்திற்கு செல்வதாக கூறி, அங்கு செல்லாமல் விஜயகாந்தின் இல்லத்திற்கு மது போதையில் சென்றுள்ளார். லாரி ஓட்டுநரான விஜயகாந்த் பணிக்கு சென்றிருந்த நிலையில் அவரது மனைவி கெளதமியை கதவைத் தட்டி மீண்டும் உறவை புதுப்பிக்க மனோகர் அழைத்துள்ளார்.
கௌதமி அதற்கு மறுத்து வீட்டை விட்டு வெளியே வராததால், இரவு முழுவதும் வீட்டு வாசலில் நின்று மது போதையில் சத்தமிட்டு கொண்டே அங்கேயே படுத்து மனோகர் உறங்கி உள்ளார். காலையில் பணி முடித்து வீட்டிற்கு வந்து விஜயகாந்த், மனோகரை பார்த்து சத்தம் கேட்டு வெளியே அனுப்பியுள்ளார். அரை போதையில் இருந்த மனோகர் தள்ளாடியபடியே ஊர் பொது மேடையில் படுத்து உறங்கியுள்ளார்.
பலமுறை கண்டித்தும் மனோகர் திருந்தாததால் கோபமடைந்த விஜயகாந்த்,
மனோகரிடம் சென்று, நேற்று இரவு ஏன் தனது வீட்டிற்கு வந்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கையில் இருந்த இரும்பு கம்பியால் மனோகரை தாக்கியதில், மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் விஜயகாந்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் விஜயகாந்த் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து, அரியலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா, விஜயகாந்துக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்பளித்தார்.