தஞ்சாவூர் யோவான் சிலம்பாட்ட கழகம், ஸ்டார் சிலம்ப பயிற்சி பள்ளி, தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கம் இணைந்து சோழன் உலக சாதனை நிகழ்ச்சியை கரந்தை தமிழவேள் உமா மகேசுவர னார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடத்தினர். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் ஆர்த்திகா நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட தலைவர் குழந்தைசாமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்த சாதனை சிலம்பாட்ட நிகழ்ச்சியை கரந்தை தமிழ்ச்சங்க செயலாளர் சுந்தரவதனம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோவான் சிலம்பப் பள்ளி ராமநாதன், ஸ்டார் சிலம்பபள்ளி பவித்ரா, யோவான் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் 40 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு மாணவரும் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக கொசாக் ஸ்குவார்ட்ஸ் செய்தவாறே ( மூட்டை மடக்கி அமர்ந்து எழுந்த நிலையில்) சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டனர். மாணவர்களின் இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.