நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அஜித்குமாரின் தம்பி , நவீன்குமாருக்கு அரசுப்பணி வழங்கப்பட்டது. மேலும் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், “அஜித்குமார் மரணத்திற்கு அரசு வழங்கிய இழப்பீட்டு மீது திருப்தியில்லை.அரசு எனக்கு கொடுத்த வேலை, வீட்டு மனை பட்டாவில் திருப்தி இல்லை, நான் இருக்கும் இடத்தில் இருந்து 80 கி.மீ். தூரத்துக்கு அப்பால் எனக்கு அரசுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாத இடத்தில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.