Skip to content

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு கூட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  இதற்கான ஏற்பாடுகளை  முன்னாள் அமைச்சரும், கரூர்  மாவட்ட திமுக செயலாளருமான   செந்தில்பாலாஜி சிறப்பாக செய்துள்ளார். துணை முதல்வர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

முதல் நிகழ்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன்  உதயநிதி  ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வு கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் கலெக்டர் தங்கவேல்,  எஸ்.பி.  பெரோஸ்கான் அப்துல்லா   மற்றும்  மேயர் கவிதா கணேசன், எம்.பி. எம்.எல்.ஏக்கள்,  அனைத்து துறை அதிகாரிகள்  பங்கேற்றனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இதில் பங்கேற்று  திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து  ஆய்வு  மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்கவும், குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்றும்  அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர்  மகளிர் சுயஉதவிக்குழுவினருடன்  கலந்துரையாடல்  நடத்தினார். அவர்களுக்கான சுழல் நிதி  கிடைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து   கரூர்  பிரேம் மகாலில் நடந்த ஒன்றிய, நகர,  பகுதி, பேரூர் திமுக  இளைஞரணி  நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டத்தில்  துணை முதல்வர் பங்கேற்று  தேர்தல் பணிகளை இப்போதே இளைஞரணியினர் தொடங்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட செயலாளா் செந்தில் பாலாஜி மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

மாலை 5 மணிக்கு  திருமாநிலையூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை உதயநிதி திறந்து வைக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில்  பொதுமக்களுக்கு நலத்திட்ட  உதவிகளையும் வழங்குகிறார்.

மாலை 6 மணிக்கு  கரூர் ராயனூரில்  பாக முகவர்கள்  ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.  நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை  மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி சிறப்பாக செய்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி வருகையையொட்டி இன்று மாவட்டம் முழுவதும்  திமுக கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

கரூர்  நிகழ்ச்சிகளில் பங்கேற்க  துணை முதல்வர்  உதயநிதி நேற்று  மாலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில்  செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

வரவேற்பு முடிந்து கரூர் புறப்பட்டு சென்ற துணை முதல்வருக்கு  கரூர் மாவட்ட எல்லை மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்பட பல இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இன்றும்  துணை முதல்வர் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.  காலையில் முதல் நிகழ்ச்சியான  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்துக்கு வந்தபோதும்  ஏராளமானோர் உதயநிதிக்கு பொன்னாடை, புத்தகங்கள், பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றனர்.

 

error: Content is protected !!