அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ள நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், பொதுவெளியில் கட்சிக்கு மட்டும் களங்கம் விளைவிக்காமல் ராமதாஸிக்கும் களங்கம் விளைவித்தாதகவும், பாமக எம்.எல்.ஏ அருளை நீக்கியது , எந்த வித அதிகாரமும் இல்லாத செயல்தலைவரின் செயல் மிகவும் மோசமானது என்றும், நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இல்லாமல் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செல்லாது என அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன் ஏற்கனவே அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், பாமக சார்பாக அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் நேரடியாக டெல்லி சென்ற முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்புமணி தரப்பு சமூகநீதி பேரவை வழக்கறிஞர் பாலு தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினர் இன்று டெல்லி செல்கின்றனர்.
அவர்கள், அன்புமணி மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டும் அதிகாரம் இருப்பதாகவும், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டமானது 15 நாட்களுக்கு முன்னதாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நடைபெற்ற கூட்டம் எனவும், அதனால் அதை அங்கீகரிக்க கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தில் நேரடியாக புகார் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்காத அந்த கூட்டத்தை அங்கீகரிக்க கூடாது என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக, பாமகவில் அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக அவர் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தவுள்ளனர்.