அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (10.07.2025) துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு உரிமைகள் திட்டமானது மாற்றுத்திறாளிகள் நலத்துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக்கூடிய சிறப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது எளிதாக அணுகுதல், சமவாய்ப்பு வழங்குதல், ஒருங்கிணைத்தல் ஆகிய மூன்று குறிக்கோள்களைக் கொண்டு கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே எளிதில் கிடைத்திட வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதனடிப்படையில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறாளிகள் நலத்துறை சார்பில் (சம்ருதி தொண்டு நிறுவனம்) முன்களப் பணியாளர்கள் மூலம் அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகர் குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றையதினம் துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசு உதவிகளை எளிதாக பெறுவதற்காக உரிமைகள் திட்டம் செயல்;படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர பகுதிகளை உள்ளடக்கிய 6 வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்களும், உட்கோட்ட அளவில் 2 ஒருங்கிணைந்த சேவை மையங்களும் ஏற்ப்படுத்தப்பட்டு சேவை மையங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக 80 முன்களப்பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த முன்களப்பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கணக்கெடுத்தல், மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்கு மதிப்பீடு செய்தல், பிறத்துறை மூலமாக வழங்கப்படும் உதவிகளை பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல், மறுவாழ்வு உதவிகள் கிடைத்திட பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும், முன்களப் பணியாளர்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாற்றுதிறனாளிகள் அனைவருக்கும் முறையாக சென்று சேரும் வகையில் எந்தவொரு மாற்றுத்திறனாளிகளும் விடுபடாத வகையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மஞ்சுளா. இதர அரசு அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.