அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னன் ராசேந்திர சோழனால்(ராஜராஜ சோழன் மகன்) 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கையிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு குடமுழுக்கு நடத்திய பெருமை வாய்ந்த கலைக்கோவிலாகும்.
சோழ மாமன்னர் ராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை தமிழக அரசு 2023ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. மேலும் கடந்தாண்டு முதல் இவ்விழா வுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளையும் ராஜேந்திர சோழன் நினைவை போற்றும் வகையில் அறிஞர்களின் சொற்பொழிவையும் நடத்தி வருகிறது.
ராஜேந்திர சோழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசு 21 கோடி ரூபாய் மதிப்பில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது.
இந்த சிறப்புமிக்க விழாவை மத்திய அரசும் இவ்வாண்டு இந்திய கலாச்சார துறை சார்பில் ஐந்து நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளது. ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான 23ம் தேதி மத்திய கலாச்சார அமைச்சர் விழாவை தொடங்கி வைக்கிறார். 27 ம் தேதி வரை 5 நாட்கள் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தெற்காசிய படையெடுப்பை தொடங்கிய 1000 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழாவாக இவ்வாண்டு மத்திய கலாசார துறையால் கொண்டாடப் படுகிறது.
வருகின்ற 27ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கங்கைகொண்ட சோழபுர விழாவை ஒட்டி நடைபெறும் திருவாசகம் மாநாட்டில் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது.
மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவை போற்றிடும் வகையில் நாணயம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய மாநில அரசு அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
டெல்லியில் இருந்து 26ம் தேதி கேரளா செல்லும் பிரதமர் மோடி அங்கு அரசு விழாக்களில் பங்கேற்கிறார். 27ம் தேதி கேரளாவில் இருந்து தஞ்சை அல்லது திருச்சி வந்து அங்கிருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்என கூறப்படுகிறது.