கோவை மாநகராட்சி 14 வது வார்டில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த யானைகளை வராமல் தடுக்க வனத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் துடியலூர், அப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு பகுதியில் உள்ள சாய் நகர், வி.கே.எல் நகர், மீனாட்சி கார்டன், வன்னி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பொதுமக்களை பயமுறுத்துகிறது. இந்த காட்டுப் பன்றிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் ஓடி வரும் நீர்வழிப் பாதைகள் வழியாக வனத்தை விட்டு வெளியேறி சின்னவேடம்பட்டி ராஜவாய்க்கால் வழியாக 14 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்குள் புகுந்து உள்ளன.
இதுகுறித்து ஏற்கனவே கோவை மாநகராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாவட்ட வன அலுவலருக்கு புகார் மனு கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 4 மணி அளவில் 7 க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் சாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சர்வசாதரணமாக வருகின்றன. இந்த காட்சிகள் அங்கு இருந்த வீட்டில் உள்ள சி.சி.டி.வி-யில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி அந்த பகுதி மக்கள் இடையே பீதியே ஏற்படுத்தி உள்ளது.
ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.