சென்னையில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதிகாலை திருவள்ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து 2 இன்ஜின்கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலையத்துக்கு புறப்பட்டது. தலா 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 45 டேங்கர்களில் டீசலும், 5 டேங்கர்களில் பெட்ரோலும் நிரப்பப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை 4.55 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, 2 இன்ஜின்கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரயில் நிலை தடுமாறி, 18 டேங்கர்கள் அடுத்தடுத்து தடம்புரண்டன. பெட்ரோல், டீசல் நிரப்பிய டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. மளமளவென மற்ற டேங்கர்களுக்கும் தீ பரவியதில், டேங்கர்கள் வெடித்து சிதறின. இதனால், 100 அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. திருவள்ளூரை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் கரும்புகை ஏற்பட்டது.
இதனால் பயந்துபோன பொதுமக்கள் வீட்டை காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக திருவள்ளூர், திருவூர், தேர்வாய் கண்டிகை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைக்க போராடினர். ஆனாலும் தீ கட்டுக்குகள் வரவில்லை.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், எஸ்.பி. சீனிவாசபெருமாள் தலைமையில் வருவாய் துறையினர், போலீஸார், மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து, விபத்து பகுதி அருகே மின் இணைப்பை துண்டித்தனர். அப்பகுதியில் வசிக்கும் 50 இருளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில், டீசல் நிரப்பிய 14 டேங்கர்கள், பெட்ரோல் நிரப்பிய 4 டேங்கர்கள் முற்றிலும் நாசமானது. . அந்த டேங்கர்களில் இருந்த சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிந்து நாசமானதாக தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சா.மு.நாசர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் ஆகியோர் வந்து, சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். தமிழக ரயில்வே காவல் துறை ஐ.ஜி. பாபு, காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழக ரயில்வே காவல் துறை ஏடிஜிபி தலைமையிலான 3 தனிப்படையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழுவை அமைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.
சரக்கு ரயில் தீ விபத்தால், சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் சேவை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் – மைசூரு வந்தே பாரத் விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் உட்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. காச்சிகுடா – செங்கல்பட்டு விரைவு ரயில் உட்பட 8 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 79 விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. புறநகர் மின்சார ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அரசு போக்குவரத்து கழகம்
(விழுப்புரம் கோட்டம்) சார்பில் காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம்,திருவள்ளூர், திருத்தணி ரயில் நிலையங்களில் இருந்து 270-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இன்று காலையில். அதாவது 17 மணி நேரத்திற்கு பின்னர் 3, 4 தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
இருப்பினும் அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.