புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் நாளை தொடங்குகிறது. இந்த திட்டம் குறித்து கலெக்டர் அருணா கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் எதிர்வரும் 15.07 2025 அன்று உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடைகோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள்/திட்டங்கள் ஆகியவற்றை அவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று எடுத்துரைத்து, அவர்கள் எளிதில் பயனடையும் வகையில் ஏற்பாடுகள் செய்து தருவது இத்திட்டத்தின் நோக்கம் .
புதுக்கோட்டை மாவட்டத்தில், மாநகராட்சி பகுதியில் 29 முகாம்களும் அறந்தாங்கி நகராட்சி பகுதியில் 10 முகாம்களும், பொன்னமராவதி, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூர். கீரமங்கலம், இலுப்பூர். அன்னவாசல் மற்றும் அரிமளம் ஆகிய 8 பேரூராட்சி பகுதிகளில் தலா இரண்டு வீதம் 16 முகாம்களும். ஊராட்சி பகுதிகளில் 151 முகாம்களும். பெரிய நகரங்களில் 7 முகாம்களும் ஆக மொத்தம் 213 முகாம்கள் 15.07 2025 முதல் 21.10.2025 வரை நடத்தப்பட உள்ளன.
மேற்படி முகாம்களின்போது நகரப்பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை. எரிசக்தி துறை. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய 13 துறைகளிலிருந்து 43 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 15.07.2025 புதுக்கோட்டை மாநகராட்சி 17 மற்றும் 25 ஆகிய வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு புதுக்கோட்டை மாநகராட்சி, எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண மஹாலில், உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கை விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். .
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார்.முன்னதாக இன்று காலை கலெக்டர் அருணா மக்கள் குறைகேட்டார். விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர்.