Skip to content

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இதனை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின்  கீழே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அங்கு பல்வேறு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்து.

அங்கு உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கிருந்த மக்களிடம் மனுக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டதன் மூலம், திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டதோடு, அவர்களிடம் விவரங்களையும்  முதல்வர் கேட்டறிந்தார். மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்பதால், மக்களிடையே, இந்த திட்டத்துக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும், கடலூர் மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.

முதல்வர் தொடங்கி வைத்ததும் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் தொடங்கியது. . தொடர்ந்து முகாம்   நவம்பர் 30-ந் தேதி வரைநடைபெறும்.

ஒவ்வொரு இடத்திலும் முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாள்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முகாம் குறித்த விவரங்கள் தெரியப்படுத்தப்பத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய விண்ணப்பங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  முகாம்களில் கொடுக்கப்படும் மனுக்களுக்கான தீர்வு 45 நாளில் கிடைக்கும் என அரசு அறிவித்து உள்ளது.

முன்னதாக  சிதம்பரம் வந்த  முதல்வர் ஸ்டாலின், காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலையை திருந்து வைத்தார். பின்னர்  முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் இளைய பெருமாள் நூற்றாண்டு வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அங்கு  இளையபெருமாளின் சிலையையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள்  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கணேசன்,  தலைமை செயலாளர் முருகானந்தம்,   பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் அமுதா தமிழ்நாடு காங். தலைவர்  செல்வபெருந்தகை,  இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், எம்.பிக்கள் திருமாவளவன்,  முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, தவாக தலைவர் வேல்முருகன்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!