கரூர் மாநகராட்சி வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை
பெற்று, நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேல், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் சுதா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,
தேர்தல் நேரத்தில் உள்ளூர் கட்டுமான தேவைக்காக மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென மாட்டு வண்டி தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் பரப்புரையின்போது நான் பேசியதை திரித்து, கேவலமான, கீழ்தரமான அரசியலை எதிர்க்கட்சி தலைவர் செய்து வருகிறார். அதுபோலவே சில அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருகின்றனர்.
உள்ளூர் கட்டுமான தேவைக்கு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது மாட்டுவண்டி தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அதை மறந்து ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் நடைபெற்ற சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் திமுகவினராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். காவல்துறையும் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தரும் என்றார்.