திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவரது மகன் அஸ்வின். மாற்றுத்திறனாளியான இவர் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் . சிறு வயதிலிருந்து சதுரங்கம் விளையாடுவதில் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 19 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடம் பெற்று சர்வதேச சதுரங்கப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரது திறமையை பாராட்டும் விதமாக இன்று காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் அஸ்வினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில்
தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாணவர் அஸ்வினை பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். மேலும் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் மாணவன் அஸ்வினை கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
மாணவர் அஸ்வின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் 473 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
அதேபோல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 554 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் 2024-2025ம் ஆண்டு 11ஆம் வகுப்புக்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் திருவெறும்பூர் தொகுதி அளவில் வெற்றி பெற்ற ஒரே மாணவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வியிலும் சதுரங்கத்திலும் சாதனைகள் படைக்கும் மாணவர் அஸ்வின் தொடர்ந்து உலக அளவில் சாதனை படைக்க அனைவரும் வாழ்த்தினர்.