புதுக்கோட்டை சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமை கலெக்டர் அருணா இன்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:
முகாம்கள் நடைபெறும் பகுதிகளில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வுப் பணிகள், விண்ணப்பம் மற்றும் அரசு வழங்கும் சேவைகளைப் பெறத் தேவையான தகுதிகள்/ ஆவணங்கள், ஆகிய விவரங்கள் அடங்கிய தகவல் கையேட்டினை வழங்கும் பணியினை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்களுடன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்ற விவரமும் தன்னார்வலரால் தெரிவிக்கப்படுகிறது. முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாநகராட்சி, சமத்துவபுரம் சமுதாயக்கூடத்தில், புதுக்கோட்டை மாநகராட்சி, 1 மற்றும் 2-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த
பொதுமக்களுக்கு நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில் இன்றையதினம் கலந்துகொண்டு, மக்களிடம் விண்ணப்பங்களை பெற்று கொண்டு, விவரங்கள் கேட்டறியப்பட்டது. மேலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பயனாளிகளுக்கு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும், மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளையும் இன்றையதினம் வழங்கினோம்.
நாளை(வெள்ளி)”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது, அறந்தாங்கி நகராட்சி, 1, 2 மற்றும் 13 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு காரைக்குடி சாலையில் உள்ள சக்கரவர்த்தி மஹாலிலும், கீரனூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு கீரனூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்திலும், திருவரங்குளம் – 1 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு எஸ்.குலவாய்ப்பட்டி, குமார் மஹாலிலும், மணமேல்குடி- 1 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மணமேல்குடி வசந்தம் திருமண மஹாலிலும், பொன்னமராவதி – 1 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு அரசமலை மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத்திலும், புதுக்கோட்டை- 1 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு புத்தாம்பூர் நைனா மஹாலிலும் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 213 முகாம்கள் 15.07.2025 முதல் 21.10.2025 வரை நடத்தப்பட உள்ளன.
எனவே, தமிழக அரசின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திட்ட முகாம்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா , தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) .ஆர்.ரம்யாதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.