தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை(ராஜ்ய சபா தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி.கள் ஜூலை 25ம் தேதி பதவியேற்கவுள்ளனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஜூலை 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.
இதனையொட்டி பலரும் மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் திருமா உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புத் தம்பி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.